படம் பார்த்து கதை சொல் 5

படம் பார்த்து கதை சொல் 5
0

ஹாய் மக்களே,

மேலே இருக்கிற படத்துக்கு தகுந்த மாதிரி உங்க மனதில் தோன்றும் காட்சிகளை அப்படியே கோர்த்து தளத்தில் பதிவிடுங்கள்…தளத்தில் register செய்து இருக்கும் யார் வேண்டுமானாலும் கதையை பகிரலாம்…

இந்த படத்தை பார்த்ததும் எல்லாருக்கும் ஒரே மாதிரியான கருத்துக்கள் தோன்றாது.ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாகவும்,ஒவ்வொரு திக்கிலும் சிந்தனை பறக்கும்.

போன முறை உங்களோட திறமையைப் பார்த்து நான் வியந்து போயிட்டேன்.இந்த முறையும் உங்களோட கதைகளை படிக்கவும் , கற்பனை வளத்தை பற்றி தெரிந்து கொள்ளவும் ஆவலாக இருக்கிறேன். இப்போ இருந்து டைம் ஸ்டார்ட்…ரெடி … கோ…

புகைப்படங்கள் நெட்டில் இருந்து சுட்டது. ஓவிய ஆசிரியருக்கு என்னுடைய நன்றிகள்.

சங்கீத மாமேதை, ஸ்வர கலா பூஷனம், கானசரஸ்வதி, என்று பல பட்டங்கள் பெற்ற அவர் வீட்டு வாசலில் எப்போதும் கூட்டம் நிற்கும். அவரை காண்பது லேசுபட்டது அல்ல. அப்படியிருக்கையில் அவரின் சிபாரிசு வேண்டி வந்திருந்தாள் மங்களம். அவர் நடுவராக பங்குபெரும் ஒரு சங்கீதபோட்டியில் தன் மகளும் பங்குபெற அனுமதிக்க சிபாரிசு செய்ய வேண்டி.

மேலும் கீழுமாக பார்த்துவிட்டு " ம்ம் எத்தனை வருஷமா பாட்டு கத்துகறா உன் பொண்ணு"என்று கேட்டார் அவர்.

“2 வருஷமாண்ணா” என்றாள் பவ்யமாக.

“யாருண்ட கத்துகறா” பதில் முடியுமுன் அடுத்த கேள்வி பாய்ந்தது.

“பாலசரவணன்” ன்னு… என்று அவள் மெதுவாக இழுக்க

எந்த பாலசரவணன்? இது அடுத்த கேள்வி.

“பாலவாக்கம் பாலசரவ” என்று மங்களம் முடிக்கும் முன் தன் இருக்கையை விட்டு எழுந்தே விட்டார் அவர்.

“டேய் சாரங்கா” என்ற அவர் கத்திய கத்தில் மங்களம் மிரண்டே போனாள்.

ஓடோடி வந்தான் சாரங்கன்.

“இவாள மொத அனுப்பிவிடு” என்று கர்ஜித்துவிட்டு விறுவிறுவென மாடியேறி போய்விட்டார்.

மங்களம் குழப்பத்துடன் பாவமாக சாரங்கனை நோக்க…

ஏன்மா, இத முன்னாலயே சொல்லிர்க்கப்டாதோ -சாரங்கன்

முன்னாலயே சொல்லிருந்தா அண்ணா கோச்சிண்ருக்க மாட்டாரோ ண்ணா -மங்களம்

உன்ன உள்ளயே விட்டருக்க மாட்டேன் -சாரங்கன்.

மங்களத்திற்கு ஒன்றும் புரியவில்லை. ஏன், தான் சிபாரிசு கேட்டு செல்பவர்கள் எல்லாம் இப்படி முறைத்து கொள்கிறார்கள், தெறித்து ஓடுகிறார்களென்று.

இன்று தெரிந்து கொண்டே ஆகவேண்டுமென்று சாரங்கனிடம் பிடிவாதம் பிடித்தாள்.

அது என்ன யாருண்ட போய் சிபாரிசு கேட்டாலும் குரு யாருன்னு கேக்றா, சொன்னதும் போகசொல்லுனு சொல்றாளே என்றாள் குழப்பமாக…

இருக்காதா பின்ன, உன் பொண்ணு பாட்டு கத்துக்கற பாலசரவணன, பாத்ருக்கியோ நீ என்று கேட்டான் சாரங்கன்.

எங்கண்ணா , எங்காத்துக்கார் போன பின்னால குடும்பத்த ஓட்ட யாரிருக்கா ஒத்தாசைக்கு. நான் தான் நெறைய ஆத்துல தளிகையும் பட்சணமும் பண்ணி கொழந்தைய வளத்திண்ருக்கேன்.

பக்கத்தாத்து பொண்ணு அவரிண்ட பாட்டு சொல்லிக்றா, அத பாத்து இவளுக்கும் ஆச தோணித்துனு அவாளே அவர்ட்ட அழச்சிண்டு போய் சேர்த்து விட்டா… நான் அங்கங்க ஓடிண்ருக்கேன் நான் எங்க அவர பாக்றது…என்றாள் புடவை தலைப்பால் வியர்வை வழிந்த முகத்தை துடைத்தபடி.

அவளை பார்க்கவே பாவமாக அலைகள் ஓயவதில்லை படத்தில் வரும் கமலாகாமேஷ் போல தோன்றியது சாரங்கனுக்கு.

சரி நான் அண்ணாட்ட பேசறேன், அதுக்கு மின்ன அந்த பாலசரவணன ஒருயெட்டு பாத்துண்டு நாள கழிச்சு வா என்று அனுப்பி வைத்தார்.

இதுவும் எல்லாரிடமிருந்தும் வந்த பதில் யான். அப்படியென்ன அந்த பாலசரவணன் பெரிய பண்டிதனோ என்ற குழப்பத்துடன் தான் மகள் வழி சொல்ல அவன் வீடு நொக்கி சென்றவளை

கலைவாணியே உனைத்தானே அழைத்தேன்,
உயிர்த்தீயை வளர்த்தேன்
வரவேண்டும் வரம் வேண்டும்

என்ற பாடல் தான் வரவேற்றது. அரண்டு தான் போனால் மங்களம்.

கழுதை கூட அழகாய் பாடுமோ என்ற சந்தேகம் வர அந்த பாலசரவணன் மேல் பரிதாபமே வந்தது. இந்த ஞானசூனியத்தை எப்படித்தான் தேற்றப் போகிறாரோ என்று.

அடுத்த நொடி மங்களத்திற்கு நெஞ்சு வலியை தந்தாள் அவள் மகள் அந்த ஞானசூனியம் தான் பாலசரவணன் என்று கைக்காட்டி.

அவன் கையில் வைத்திருந்த வீணை, அவன் அமர்ந்திருந்த கோலம், அவன் பாடிய காதை கிழிக்கும் பாடல் என்று, வந்த ஆத்திரத்தில் அவன் கையிருந்த வீணையை பிடுங்கி தலைக்குமேல் தூக்கி எறிப்போனால்.

பிறகு, அதை கீழே வைத்துவிட்டு,

“இனி நீ உன் வாழ்க்கைல, பாடுறேன்னு வாயத் தெரந்த, நான் என்ன செய்வேன்னு தெரியாது” என்றுவிட்டு மகளை இழுத்துக்கொண்டு போனால்.

2வருடமாய் பாட்டு சொல்லிக்கொள்ளும் தன் மகளை ஒரு முறை கூட பாட சொல்லி கேட்காத தன் முட்டாள்தனத்தை நொந்துக்கொண்டாள் மங்களம்.

இறுக்கி மூடிக்கொண்டிருந்த கண்களையுள் காதையும் திறந்து பார்த்துவிட்டு,

அப்பாடா, இன்னிக்கு தான் விடிவுகாலம் வந்துருக்கு. மகராசி நீ நல்லாயிருக்கனும்

என்று வாழ்த்தினால் கையில் வீணையோடு சுவற்றில் தொங்கிய சரஸ்வதிதேவி…

2 Likes

கோமதி வீணை மீட்டுவதில் நல்ல திறமையான பெண். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அவள் தெருவில் உள்ள அம்மன் கோவிலில் வீணை மீட்டி அனைவரையும் மகிழ்விப்பாள். அன்று வெள்ளிக்கிழமை கோமதி கோவிற்குச் செல்ல தயாராகிக் கொண்டிருந்தாள். அப்பொழுது அவள் அம்மா சிவகாமி அவளை வாணலியே இல்லாமல் வறுத்துக் கொண்டிருந்தார். “உனக்கு இருக்கிற திறமைக்கு நீ வெளியில் ஒரு வீணை வகுப்பு நடத்திருந்தாலும் நம்மை ஒரு வேளை சோறு நல்லா சாப்பிட்டிருக்கலாம், ஆனால் நீ , வெறும் ஒரு கல்லுக்கு உயிர் இல்லாத ஒரு சிலைக்கு இப்படி வீணை மீட்டி சீறாட்டுறத்து தேவை இல்லாதது ஒன்ணு. அந்த அம்மன் நமக்காக என்ன செய்திருக்கிறது? நல்லா இருந்த உன் அப்பா ஒரு எறும்பு காதில் கடிச்சு இறந்து போனாரே அப்போ எங்க போச்சு? அவர் போன அதிர்ச்சியில் எனக்குப் பக்கவாதம் வந்து நான் படுத்த அப்போ ஏன் வரல என்னை குணப்படுத்த? சரி இதனை வருஷமா கண் பார்வை இல்லாமல் அந்த அம்மனை சந்தோஷப் படுத்த நீ வீணை மீட்டுரியே உனக்காக என்ன நல்லது நடந்துருக்கு? எல்லாருக்கும் வாழ்க்கையில கஷ்டம் வரும் நமக்குக் கஷ்டமே வாழ்கையா வந்திருக்கு… நீ என்னமோ பண்ணு” அப்படினு சொல்லிக் கொண்டே சிவகாமி அம்மா ஈரமான தன் கண்ணங்களைச் சாயம் போன அவர் புடவை முந்தானையில் துடைத்துக் கொண்டார். கோமதிக்கு தன் எப்படி உணர்கிறோம் என்று கூட புரிந்துக் கொள்ள முடியவில்லை .கலங்கிய கண்களை ஒரு நொடி அழுத்த மூடி திறந்து தன்னை ஒரு நிலைப் படுத்திக் கொண்டாள். எதிர்பார்ப்புகள் எதுவும் இல்லாத ஒரு வாழ்க்கையே அவள் வாழ்ந்துக் கொண்டிருக்கிறாள், எனவே வழக்கம் போல் வீணையை எடுத்துக் கொண்டு கோவில் சன்னத்திற்கு வந்தாள். பூஜை ஆரம்பிக்க இன்னும் 15 நிமிடங்கள் உள்ளதால், கோவிலின் குளக்கரைக்குச் சென்று அமர்ந்தாள். மனதில் என்ன ஒரு அழுத்தம் இருந்தாலும் இந்த இடத்திற்கு வந்த பின் அனைத்தும் காற்றோடு காற்றாகக் கலந்துவிடும். அப்படி அவள் அமைதியாக இயற்கையை இரசித்துக் கொண்டிருக்கும் பொழுது, யாரோ பேசும் குரல் கேட்டு , சுயநினைவிற்கு வந்து கேடாகலானாள். ‘டேய் சந்துரு, நம்மை வந்த வேலை இவ்வளவு சீக்கிரமா நிறைவேறும் நான் நினைக்கல டா, இருந்தாலும் நீ சரியான மூளைக்காரன் டா. கண்ண மூடி திறக்கறத்துக்குள்ள பொருளை வச்சிட்டீயே… கில்லாடிதான் டா நீ… இன்றைக்கு மட்டும் நம்மை நினைச்சது சரியா நடந்துருச்சுனா வரப் பங்கு பணத்துல 50 உனக்கு 50 எனக்கு. நினைத்துப் பார்க்க முடியாத வாழ்க்கையை நாம வாழப்போகும் டா" அப்படியென்று ரபீக் குதுகலித்தான். ரபீக் முகத்தில் அவ்வளவு ஆனந்தம் " ஆமா டா இன்றைக்கு மட்டும் எல்லாம் சரியா முடிஞ்சிருச்சுனா நம்மை எங்கேயோ போக போகிறோம்… இன்றைக்குச் சரியா 7.30 பூஜைக்கு இங்க இப்ப இருக்கிற அம்மன் கோவில் இருக்காது. சல்லி சல்லியா போய்விடும். பொருளை எங்க வச்சா பத்திரமா இருக்குமோ அங்க வச்சிருக்கேன். அந்த குருட்டு பொண்ணு வீணையை தொட்டோன பூம்ம்ம்… எல்லாம் பீஸ் பீஸ்சா போய்விடும். நம்மை வேளை என்னனா, வெடிகுண்டு வெடித்தவுடனே , அந்த கோமதி தான் காசுக்கு ஆசைப்பட்டு மனித வெடிகுண்டா மாறிடுச்சுனு ஊர் முழுக்க பரப்பவேண்டும். கடைசியில் பழி கோமதிக்கும், பணம் நமக்கும்’. இதைக் கேட்டு கோமதி திடுக்கிட்டாள். அம்மன் பூஜையில வெடிகுண்டா என்று, அவளுக்கு நினைவு தெரிந்து இந்த கோவிலின் நிலத்திற்கு நிறையத் தரப்பினர் சண்டையிடுவது உண்டு. அதில் சமீபகாலமாக நெல்சன் குருப் குறி வைப்பதை ஊர் பண்ணையார் மூலமாகக் கேள்வியுற்றாள். அம்மன் கோவில் நிலத்தில் கேளிக்கை மையம் ஒன்று அமைத்தால், நல்ல லாபம் பார்க்கும் நோக்கத்தில் மட்டுமே நெல்சன் குருப் நிறுவாகி பட்டில் இந்த திட்டத்தைத் தீட்டியிருக்க வேண்டும் என்று ஊகித்தாள். இவர்களுக்குச் சரியான பாடம் புகட்ட வேண்டும் என்பதனை நினைத்து, கோவிலின் சன்னிதானத்திற்குள் நுழைந்தாள். பூஜை முடிந்து, அவள் வீணை மீட்டுவதற்கான நேரமும் வந்தது. கோமதி எப்பொழுதும் அமரும் கச்சேரி கூடத்தில் அமராமல், அம்மன் சன்னதியை நோக்கி நடந்தாள். அம்மனை மனமுருகி வேண்டிய பின் , மெதுவாக உடலை அசைத்து அருள் வந்ததைப் போல ஆட்டம் ஆடினாள். இதைச் சற்றும் எதிர்பார்க்காத பூசாரி , கோமதியை நோக்கி ஓடினார். "அம்மா தாயே என்ன வேனும் எதற்காக இந்த பொண்ணு மேல வந்துருக்க… என்று கேட்க, கோமதியோ, " இன்றைக்கு வீணையை எனக்காக என்னை மனமுருகித் தரிசிக்கிற சந்துரு தான் மீட்டனும்… எனக்கு எப்பொழுதும் கூட்டத்தோடு கூட்டமா தான் அவன் வீணையை மீட்டுறான் அதனால், இன்னிக்கு அவன் தனியாக எனக்காக இசைக்கட்டும். அந்த வீணையை எடுத்து வந்து அவனை மீட்டச்சொல்லு , நான் கேட்கனும்… அப்படினு அவள் அருள் வந்த பெண் மாதிரியே உரக்கக் கூறினாள். கோவிலிலிருந்தவர்கள் சந்துருவை அழைத்து வந்து வீணையை மீட்ட கூறினார்கள். சந்துருவோ பயத்தில் விழி பிதுங்கிக் கொண்டிருந்தான். கைகள் நடுங்க … வியர்வை நெற்றியில் வழிந்தோட நடுங்கினான். கோமதியோ, இப்போ நீ மீட்டுறியா இல்ல நான் இதை உன் மண்டையில் போட்டு உடைக்கவானு, வீணையைத் தூக்கினாள். சந்துருவோ வேனா…வேனா நான் உண்மையை சொல்லிடுறேன். சந்துரு ரபிக் கூட இணைந்து போட்ட திட்டத்தைப் போட்டு உடைத்தான். ஊர் மக்கள் அவனையும் ரபிக்கையும் மொத்து மொத்துவென மொத்தி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். நெல்சன் நிறுவனத்தின் மீது வழக்குப் பதிவு செய்து தண்டனையை நிறைவேற்றினர். தக்க சமயத்தில் ஊர் மக்களின் உயிரைக் காப்பாற்றிய கோமதியை ஊர் மக்கள் பாராட்டினர். அவள் செய்த நல்ல செயலிற்காகச் சன்மானமாக ரூபாய் இரண்டு லட்சம் கொடுத்து ஊக்குவித்தனர். எந்த பலனையும் எதிர்பார்க்காமல் ஒரு செயலைச் செய்தால், நல்லதே நடக்கும் என்பதை தன் தாயாருக்குப் புரிய வைத்தாள்.

1 Like